உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் : 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்!!

401

 

பாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார்.

ஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு கடந்த 2010 யூலை மாதம் முதல் முறையாக முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதான் உலகளவில் முதல்முறையாக முகம் முழுவதும் செய்யப்பட்ட முக மாற்று அறுவை சிகிச்சையாகும்.

இந்நிலையில் ஜலதோஷத்துக்காக சில ஆண்டிபயாடிக் மருந்துகளை ஜெரோம் சாப்பிட்ட நிலையில் அது அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. இதையடுத்து சத்திர சிகிச்சை செய்யப்பட்ட அவரின் புதிய முகம் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டது.

முகம் இல்லாமல் ஜெரோம் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தோல்கள் தானமாக கிடைப்பதற்காக காத்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரியில் 22 வயதான இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் தோல்கள் ஜெரோமுக்கு பொருத்தப்பட்டு மீண்டும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு புதிய முகம் கிடைத்துள்ளது. ஆனாலும் மண்டை ஓடு, தோல் மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள் இன்னும் முழுமையாக ஜெரோமுக்கு சீரமைக்கப்பட வேண்டும்.

ஜெரோம் கூறுகையில், எனக்கு நானே தற்போது நன்றாக உணர்கிறேன், 22 வயதுடைய நபரின் தோல்கள் வைக்கப்பட்டுள்ளதால் எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் ஜெரோம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.