மலையென உயரும் தங்கத்தின் விலையால் திணறும் இலங்கையர்கள்!!

479

 

உலக வாழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான் தங்கம். மனித வாழ்வியலோடு ஒன்றித்துபோன இந்த தங்கம் அழகு ஆபரணம் மட்டும் அல்ல, அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மதிப்பு மிக்க ஒரு மங்கலப் பொருளாகவும் தங்கம் பார்க்கப்படுகின்றது.

விலை மதிப்புக்கூடிய பொருளாக பார்க்கப்படும் இந்த தங்கம், அவசர பணத்தேவைக்கு கைகொடுத்து உதவும் நண்பனாகவும் உள்ளது. அண்மைக்காலங்களாக மக்களை தங்கத்தின்பால் ஈர்க்க வைக்கும் ஒரு தினம்தான் அட்சய திருதியை தினம்.

இந்த தினத்தில், தங்கம் வாங்கினால் நல்லது என்றும் ஐஸ்வரியம் பொங்கும் என்றும் எம் முன்னோர்கள் கூறிவைத்துச் சென்றுள்ளனர். காலப்போக்கில், அது ஒரு மறுக்கப்படமுடியாத கடமையாகவே எம் மக்கள் மத்தியில் மாற்றம் அடைந்து விட்டது, ஒரு குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கி வைப்போமே என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு சடங்காகவே அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது மாறிப்போனது.

பற்றாக்குறைக்கு, தங்கம் குறித்த ஊடக விளம்பரங்களும், கவர்ச்சியும் வெகுவாக மக்களை ஈர்க்கச் செய்துவிட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் உலக வாழ் அனைத்து மக்களாலும் சம்பிரதாய பூர்வமாக அட்சய திருதியை தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நகைக்கடைகள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டதோடு, மக்கள் கூட்டம் நகை கடைகளில் திரண்டிருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.

துள்ளியமாக கூறப்போனால் அட்சய திருதியை என்பது தங்கத் திருவிழா என்றே கூற வேண்டும், அந்நாளில் பெரும்பாலான தங்க நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களுக்கு பல வெகுமதிகள் வழங்கப்பட்டன.

எனினும், தங்கத் திருவிழா முடிந்து அதாவது அட்சய திருதியை தினம் முடிந்து அடுத்த தினமான நேற்று இலங்கை வாழ் மக்களுக்கு அரசாங்கம் திடீர் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து இலங்கையில் தலைநகரின் தங்கம் கொட்டிக்கிடக்கும் இடமான செட்டியார்தெருவில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றத்தின்படி, 24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை, 62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது. 8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 தொடக்கம் 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது. இது முன்னர், 50,000 தொடக்கம் 51.000 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தங்கதை கொள்வனவு செய்வோர் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.