கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப்பு : அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்!!

253


ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு சிறுமியின் படுகொலை இந்தியாவில் சிறுமிகளின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் – கபீர்தாம் என்ற இடத்தில் தனது சகோதரரின் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து, அருகிலிருந்த கால்வாய்க்குள் வீசியுள்ளார்கள்.



இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். இதேவேளை, திருவள்ளூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள் கடுமையாகத் தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திய நபர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பிரதேச மக்கள் குறித்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர்.



இந்நிலையில், இராமநாதபுரம் பகுதியில் 9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நிலையில் தேடப்பட்டு வந்த காவல் நிலைய தலைமை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு ஆய்வாளரின் மகளை வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற, அதே குடியிருப்பில் வசித்து வந்த மற்றுமொரு காவலரே கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் நடத்த முயன்ற பேராசிரியையான நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் நிர்மலா தேவியை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றிடம் CBCID அனுமதி கோரியிருந்தது.


7 குழுக்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்மலா தேவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.