பட்டமளிப்பு விழாவில் பாட்டியை கண்கலங்க வைத்த மாணவர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

299

 

தென்னாப்பிரிக்காவில் மாணவர் ஒருவர், பட்டமளிப்பு விழாவில் தனது பாட்டியை அழைத்து வந்து, அவரையும் தன்னுடன் மேடையில் ஏற்றி பட்டம் பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் KZN என்னும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், Nkandla என்னும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்து படித்த மாணவர் ஜபுலோ, தனது 89 வயது பாட்டியுடன் பட்டம் பெற வந்தார்.

அப்போது அவர் ஜுலு எனும் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். பின்னர், ஜபுலோவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், தன் பாட்டி மீது தனது பட்டமளிப்பு மேலங்கியை அணிவித்து அவரையும் தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜபுலோ மேடையில் தனது பாட்டியுடன் சேர்ந்து சட்டத்துறையில் பயின்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இதுதொடர்பாக ஜபுலோ கூறுகையில், ‘எனக்குத் தாய், தந்தை இல்லை. என் சிறிய வயதிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். என்னை வளர்த்தது இவர்தான். என் கிராமம் கல்வியில் மிகவும் பின் தங்கியது என்பதால், அங்கு பள்ளிக்கு செல்வதே பெரிய விடயம்.

இன்று நான் இங்கு நிற்பதற்கு இவர் மட்டுமே காரணம். இங்கு என்ன நடக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது. படிப்பு தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பது மட்டும் அவருக்குத் தெரியும்.

இன்று நான் சட்டம் படித்து பட்டம் வாங்க இவர் மட்டும்தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அப்போது ஜபுலோவின் பாட்டி, தனது பேரனுக்கு முத்தமிட்டு வாழ்த்து கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.