வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் வளாகம் மூடப்பட்டது!!

471

 

வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை வைக்க முற்பட்டதையடுத்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தளம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும் தற்போது அவ் வளாகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதனால் இதுவரை எந்த மத தலங்களும் வைக்கப்படவில்லை.

இந் நிலையில் சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் புத்த விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அதற்கான பொருட்களையும் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக் மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என்பதனை அடிப்படையாக கொண்டு வளாக நிர்வாகம் அதனை தடுத்ததுடன் கொண்டு வரப்பட்ட பொருட்களையும் தமது கட்டுப்பாட்டினுள் எடுத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்கள் நிர்வாகத்தினருடன் முரண்பாடான நிலையை உருவாக்கியிருந்தமையினால் வவுனியா வளாகத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் நேற்று மாலை 6 மணிக்கு முதலும் பெண் மாணவர்கள் இன்று காலையும் வெளியேற வேண்டும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வளாகமும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டிடத்தொகுதிக்கு சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.