வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்தினரை தடுத்து மறியல்!!

641

 

வவுனியா பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையே நேற்று தர்க்கம் ஏற்பட்டு உத்தியோகத்தர்களை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற தடைகளை ஏற்படுத்தியதுடன் வாசலை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதையடுத்து பல்கலைக்கழகத்தை வரும் வியாழக்கிழமை வரை மூடிவிடுவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.  இதையடுத்து இன்று பல்கலைக்கழக முதல்வருடன் பொலிசார் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான நிலையை எட்டியிருந்தது.

எனினும் இன்று பிற்பகல் வேளையின்போது பல்கலைக்கழக உத்தியோகத்தர்களை அவர்களது அலுவலகத்திலிருந்து வெளியேற விடாமல் மாணவர்கள் பிரதான வாசலை மறித்து போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் கல்வி மற்றும் மத சுதந்திரத்தைக் கொடு, எங்களுக்கு மாணவர் விடுதி வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை உடனே திறக்குமாறு கோரிய வாசகங்களைத் தாங்கியவாறு மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து மாணவர்களின் சார்பாக மூவரை பல்கலைக்கழக முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியதையடுத்து மாலை 5 மணியளவில் மாணவர்கள் தமது மறியல் நடவடிக்கைகளைக்கைவிட்டு தமது விடுதிகளுக்குச் சென்றனர்.

பேச்சுவார்த்தையின்போது இன்று இரவு மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கும் நாளை அங்கிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.