தலையில் ஏற்பட்ட காயத்திற்கு காலில் அறுவை சிகிச்சை : அதிர்ச்சி சம்பவம்!!

834

 

இந்தியாவில் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், விபத்தில் சிக்கிய விஜயேந்திரா என்ற நபர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயேந்திராவுக்கு, தவறுதலாக காலில் துளை போட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

விஜயேந்திராவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த அவர், தனது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து விஜயேந்திராவின் உறவினர்கள் விசாரித்தபோது, காலில் அறுவை சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த வீரேந்திரா என்ற நபருக்கு பதிலாக, விஜயேந்திராவுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகிகள் நடத்திய விரிவான விசாரணையில், மூத்த மருத்துவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் தனது தவறு வெளியில் தெரியாமல் இருக்க, விஜயேந்திராவின் மருத்துவ ஆவணங்களை அழிக்க முயன்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த குறித்த மருத்துவர், தனியாக இனி எந்த அறுவை சிகிச்சையும் செய்யக் கூடாது என மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.