வவுனியாவில் பட்டதாரிகளை தெருவில் விட்ட நல்லாட்சி : கறுப்புக் கொடியுடன் போராட்டம்!!

329

 

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (16.05.2018) காலை 10 மணியவில் கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இவ் போராட்டம் முன்னேடுக்கப்பட்டதோடு கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் மேற்கொள்ளப்பட்டது.

அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே? , பேச்சுவார்தை போதும் நியமனம் வழங்கு, அரச நியமனம் பட்டதாரிகளுக்கு எட்டாக்கனியா?, பட்டதாரிகளை தெருவில் விட்ட நல்லாட்சி.., நல்லாட்சி அரசில் நாடகம் தான் ஆட்சியா…? , வெற்றிடங்கள் ஏராளம் பட்டதாரிகள் வீதியோரம் என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஆண், பெண் பட்டதாரிகள் என 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.