யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம் : இளஞ்செழியன் பிறப்பித்துள்ள கட்டளை!!

404


யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.



குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி கட்டளை பிறப்பித்தார்.



இதில், “சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும்.



மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.


ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான 27 வயதுடைய ஹம்சிகா என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.