மண்டபத்தை பூட்டிவிட்டு உள்ளே நடக்கும் திருமணங்கள் : தொடரும் தூத்துக்குடி அவலம்!!

293

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். போராட்டம், துப்பாக்கிச்சூடு நடைபெற்று மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் புதிதாக பதவியேற்ற சந்தீப் நந்தூரி கூறுகையில், அமைதியை நிலை நாட்டுவதே என் முதல் வேலை, காவல்துறைக்கு அஞ்சாமல் வியாபாரிகள் கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் சில கடைகள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, மினி வேன்கள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முகூர்த்த நாள் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் வந்தால் மட்டும் மண்டபத்தைத் திறந்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர் திருமண வீட்டார். பெண் வீட்டில் சிலர், மாப்பிள்ளை வீட்டில் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். மண்டபத்துக்கு உள்ளே திருமணம் நடப்பது வெளியில் இருக்கும் ஒருவருக்கு கூட தெரியாத வண்ணம் அவ்வளவு அமைதியாக திருமணங்கள் நடைபெற்று வருகிறது.