ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் : நடுவானில் திக் திக் நிமிடங்கள்!!

349


சென்னை வான்வெளியில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்தது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.



கடந்த 21ம் திகதி இரவு விசாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இண்டிகோ ஏர்பஸ் விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

சென்னை வான்வெளியில் இரவு 9.31 மணி அளவில் 24,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதே உயரத்தில், 300 அடி தொலைவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது.



இண்டிகோ விமானத்தில் இருந்து தானியங்கி எச்சரிக்கைக் கருவி, மிக அருகில் ஒரு விமானம் மோதல் தூரத்தில் வந்து கொண்டிருப்பது குறித்து விமானிக்கு எச்சரிக்கை செய்தது.



இதனால் சுதாரித்த விமானி, அவசர, அவசரமாக விமானத்தை பாதுகாப்பான உயரத்துக்கு உடனடியாக உயர்த்தினார்.


இதனால் இரண்டு விமானங்களும் மோத இருந்தது தவிர்க்கப்பட்டது. இதை இண்டிகோ விமான நிறுவனம் உறுதிப்படுத்திப்படுத்தி உள்ளது. ஆனால், விமானப்படை சார்பில் யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்த பாதையில் திடீரென விமானப்படைக்கு சொந்தமான விமானம் மோதல் தூரத்தில் வந்தது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.


நடுவானில் விமானங்கள் மோதியிருந்தால், அதில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருப்பார்கள்.

மேலும், தரைப்பகுதியிலும் விமான பாகங்கள் விழுந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.