வவுனியாவில் பொது மயானக்காணி அபகரிப்பு!!

324

வவுனியா, சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பபட்டுள்ளதாக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாந்தசோலை கிராமத்திற்கான பொது மயானத்தின் காணி கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் இனத்தவர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

பொது மயானத்திற்கு இறுதிக்கிரியைகளுக்காகச் சென்ற பொதுமக்கள் பொது மயானக்காணியில் தூண்போட்டு வடக்குப் பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவு அபகரிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து அது பொது மயானத்திற்குரிய காணி என்பதை கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக அறிந்து கொண்டபின்னர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பொது மயானத்திற்குச் சென்ற பொலிஸார் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவர் அக்காணியினை அபகரித்துள்ளதாகவும், காணியினை தமிழர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சாந்தசோலை கிராம அபிவிருத்திச்சங்கம் தொடர்புபட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.