இறந்தவர்களை நினைவுகூர்தல் தேசத்துரோகக் குற்றமா : வங்கியின் நடவடிக்ககைக்கு ஜனகன் கண்டனம்!!

301


மே 18ம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நினைவேந்தல் நிகழ்வினை செய்தமை தொடர்பில், குறித்த வங்கியின் முகாமையாளர் ஒருவரும் சிற்றூழியர் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் வி.ஜனகன் ஆகிய நான் குறித்த வங்கியின் நடவடிக்கைக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

போர் நடந்து பல்லாயிரம் மக்கள் இறந்த இடத்தில் இருக்கும் தனியார் வங்கி, மக்களின் மன நிலையினைப் புரிந்துகொள்ளத் தவறியதா என்ற கேள்வியே என் மனதில் எழுகின்றது.

கிளிநொச்சியில் இயங்கும் இந்தக் கிளையில் இருந்த ஊழியர்கள் செய்தது நிறுவனம் ஒன்றின் வரையறைகளுக்குள் வரவில்லை என்றாலும், அதனைக் கையாளும் போது அங்கு உள்ள மக்களின் மனநிலையையும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்.

அந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அந்தக் கொடிய போரில் தங்கள் உறவுகளை இழந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு மற்றவர்கள் போல் துக்கம் அனுஸ்டிக்க தேவை ஏற்பட்டிருக்கலாம்.

ஒருவேளை இதனை அந்த வங்கியின் தலைமை விரும்பாமல் இருந்தால் கூட, அப்பிரதேச மக்களின் உணர்வுளுக்கு மதிப்பளித்து அந்த ஊழியர்களை இடைநிறுத்தாது இந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தங்கள் கிளைகளில் இடம்பெறாமல் தடுப்பதற்கான அலுவலக ரீதியான கட்டளையைப் போட்டிருக்கலாம்.

அது சரி வங்கியின் தலைமையே, நீங்கள் கூறிய அறிக்கையில் இனமத ரீதியான செயற்பாடுகளுக்கு எமது வங்கி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்படியாயின் கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு ஏன் உங்கள் கிளைகளை அலங்கரிக்கிறீர்கள்? வெசக், பொசன் வரும்போது அலங்கரிப்பது மட்டும் அல்லாமல் உங்கள் ஊழியர்கள் தன்சல் (அன்னதானம்) வழங்குகிறார்களே? தைப்பொங்கலுக்கு பொங்குகிறீர்கள். சிங்கள, தமிழ் புது வருடத்துக்கு அந்த கொண்டாடங்களையும் செய்கின்றீர்கள்.

அந்த இடத்தில் மாபெரும் துயரச் சம்பவம் இடம்பெற்றதை நினைவுகூர்கிறார்கள். இதே போல் தானே சுனாமியால் மக்கள் இறந்ததும் நினைவுகூரப்பட்டது. அப்போதும் உங்கள் பல கிளைகள் இந்த அனுதாப நினைவுகூரலை செய்தார்கள். அது தவறாகவில்லையா? அப்போ தமிழர்கள் தங்கள் கொத்துக் கொத்தாக இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தால் தான் அது இனவாதமா?

இவர்கள் என்ன புலிகளின் மாவீரர் நாளையா அனுஷ்டித்தார்கள்? ஒரு சில இனவாத சக்திகளின் சிந்தனை போல் போரில் இறந்த தமிழர்கள் எல்லாம் புலிகள் என்கிறீர்களா? அப்போது தமிழர்கள் எல்லாம் புலிகளாக? பிறகு எதற்கு அந்தப் புலிகளின்(தமிழர்களின்) வைப்புக்கள், கணக்குகள் உங்கள் வங்கியில்?

அந்த பிரசேதங்களில் உங்கள் கிளைகள்தான் எதற்கு? இந்த நடவடிக்கையினை மீள நீங்கள் பெற்றுக்கொள்ளாவிட்டால் தமிழ் மக்கள் உங்கள் வங்கிக்கு எதிராக திரும்புவதினை நீங்கள் தடுக்க முடியாத விடயமாக மாறும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், எமது கட்சியின் தலைவருமான கௌரவ அமைச்சர் மனோ கணேசனுடன் பேசியுள்ளேன்.

இந்த நடவடிக்கையானது நிச்சயமாக நல்லிணக்கத்துக்கான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு. மிக விரைவில் இந்த நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் குறித்த தரப்பினருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

வி.ஜனகன்
அமைப்புச் செயலர்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி