வவுனியா வர்த்தக சங்கத்துடன் மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் சந்திப்பு!!

610


வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று (26.05.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கித்தினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் க.இராஜலிங்கம் தலைமையில் வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தது.



இதன்போது வர்த்தக சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மூடியதன் காரணமாக வவுனியா வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டதோடு, வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், அரச தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்வினை பெறுவதற்கான ஒர் ஒழுங்கினை செய்து தருமாறும் கேட்டிருந்தனர்.

அத்துடன் வவுனியாவில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் வவுனியா நகரில் உள்ளுர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஏனைய கடைகளை வவுனியாவில் வாழ்கின்ற மூவின மக்களின் சனத்தொகையின்படி விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.



வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமையவுள்ள கடைத்தொகுதியின் அருகாமையில் 80 பேஜ் காணி வர்த்தக சங்கத்திற்கு ஒதுக்கித்தருமாறும் வர்த்தக சங்கத்தினால் கேட்கப்பட்டிருந்தது.



வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வடமாகாண சபை மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் க.இராஜலிங்கம், செயலாளர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.