வவுனியாவில் தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றிய 11 வயது தமிழ் மாணவன்!!

319


பாடசாலைகளில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல பாடசாலைகளில் மாணவர் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டிருக்கின்றது.



வவுனியா மாவட்டத்தின் கனகராயன் குளம் மகாவித்தியாலத்துக்கான மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் அண்மையில் நடைபெற்றிருந்தது.

தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவன் மாதுளனும், மாணவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தான்.



தரம் 6 இன் மூன்று பிரிவு வகுப்பறைகளுக்கும் தும்புத் தடியும், குப்பைக் கூடையும் வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தான்.



தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல்வேலையாக தான் வழங்கிய வாக்குறுதியை மாணவன் நிறைவேற்றியுள்ளான்.


தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்துவம் இல்லை, தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் வழங்கும் வாக்குறுதிகளிலிருந்து வழுவுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று பலமான குற்றச்சாட்டுக்கள் சரளமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

காலம்காலமாக தமிழ் அரசியல் தலைமைகளினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் போக்குகள் இவ்வாறு இருப்பதனால்தான் இன்னமும் விடிவு கிடைக்காத இனமாக தமிழினம் அழுது கொண்டிருக்கின்றது.


இவ்வாறானதொரு சூழலில், தேர்தல் வாக்குறுதி என்பது வெறுமனே வாக்குகளைக் கவர்வதற்கான உத்திதான் என்று இருக்கின்ற நிலைமையில், அதையும் தாண்டி 11 வயது மாணவன் அதை நிறைவேற்றிக் காண்பித்து, நல்லதொரு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றான்.

தமிழ் அரசியல்வாதிகள் அந்த மாணவனிடம் பாடம் கற்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டி, ஆட்சிக்கு வருவதற்காக, தமிழ் மக்களின் வாக்குளை அள்ளுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசிய நல்லாட்சி அரசுக்கும், 11 வயது மாணவனின் செயற்பாடு நல்லதொரு பாடம்தான்.

இளையோர், பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகிச் சீரழிந்து கொண்டிருக்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகின்றது.

அந்தச் சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்று எண்ணி தலையைப் பிய்க்கும் இந்தச் சூழலில், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் மனப்பாங்கு கொண்ட மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் வளர்ந்து வருகின்றார்கள் என்பது ஆறுதலான செய்தியே.


இளம் சமூகத்தின் பிறழ்வான நடத்தைகளை மாத்திரம் வெறுமனே விமர்சித்துக் கொண்டிருக்காமல், அவர்களின் ஆக்கபூர்வமான, மூத்தோருக்கே வழிகாட்டுகின்ற செயல்களையும் பாராட்ட வேண்டியது அவசியமாகும்.

பாராட்டுக்கள் நிச்சயம் மாணவர் சமூகத்தின் மனதில் மாற்றங்களையும் உருவாக்கும்.வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நல்லதொரு பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தமிழர் அரசியலுக்கு வர வேண்டும்.

தம்மால் எது முடியுமோ அதை வாக்குறுதிகளாக வழங்கும் தலைவர்கள் வரவேண்டும்.

11வயது மாணவனின் செயற்பாடு, எதிர்காலத்தில் தமிழர் அரசியல் அவ்வாறான பிரதிநிதிகளை, தலைவர்களை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது.

-தமிழ்வின்-