வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆனந்த சங்கரியிடம் எடுத்துரைப்பு!!

386


தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் இருப்பையும், இன ரீதியான நில விகிதாசார பரம்பலையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்புகள் அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் சுட்டிகாட்டியுள்ளனர்.



இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையில் தென்னிலங்கை கட்சிகளின் ஆதரவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது.



தற்போது நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் பின்புலத்தில் தென்னிலங்கை கட்சிகளின் நிகழ்ச்சி நிரலே உள்ளது.



தென்னிலங்கை கட்சிகளுக்கும், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதர இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டிய கட்டாய நிலையில் வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளது.


அவ்வாறு ஒத்துழைப்பதன் மூலமே அவர்களது ஆட்சியை தக்க வைக்க முடியும். இந்த நிலையில் வவுனியா நகரசபையின் உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக நகரசபைக் காணியில் எந்தவித அனுமதிகளும் பெறாது மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக நிலையம் ஒன்று கட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான விவாதம் வவுனியா நகரசபையில் நேற்று இடம்பெற்ற நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தை அடாத்தாக கட்டி நகரசபைக்கு எதிராக செயற்பட்டவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணி தென்னிலங்கை பிரதான கட்சிகளுடன் இணைந்து உடன்பட்டது.


நீண்டகால தூர நோக்கின் அடிப்படையில் இச் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன செயற்பட்டிருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் குறித்த வியாபார நிலையம் சட்டவிரோதமாக செயற்பட்டவருக்கு வழங்கிய சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

இது எதிர்காலத்தில் வவுனியா நகரில் நகரசபையின் காணிகளை கையகப்படுத்தி வர்த்தக நிலையங்களை அமைத்துள்ளவர்களுக்கு வாய்ப்பானதாகவும், மேலும் பல கடைகளையும் வேறு இனத்தவருக்கு வழங்க வேண்டிய சூழலையும், முன்மாதிரியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் வவுனியா நகரசபைக்கு நகரில் அவர்களது அலுவலகம் அமைந்துள்ள கட்டடத் தொகுதியை தவிர வேறு காணிகள் இல்லாத நிலையை உருவாக்கும் என்பதுடன் இன ரீதியான நிலப்பரம்பல் விகிதாசாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்து விடும்.


தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தென்னிலங்கை கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் தாக்கள் கவனம் செலுத்தி தமிழினத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-