வடக்கு மாணவி தேசிய ரீதியில் மூன்று புதிய சாதனைகள்!!

221

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம்ப தினமான நேற்றைய தினம் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்னெச், க்ளீன் அண்ட் ஜேர்க் மற்றும் ஒட்டுமொத்த எடை ஆகியவற்றிலேயே ஆஷிகா புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினார்.

ஸ்னெச் முறையில் 76 கிலோ கிராம் எடையையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 97 கிலோ கிராம் எடையையும் தூக்கிய ஆஷிகா, மொத்தமாக 173 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

இதன் மூலம் கடந்த வருடம் (ஸ்னெச் 74 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 96 கி.கி. மொத்தம் 170 கி.கி.) நிலைநாட்டிய தனது சொந்த தேசிய சாதனையை ஆஷிகா புதுப்பித்தார்.

அத்துடன் இந்த மூன்று சாதனைகளும் கனிஷ்ட தேசிய மற்றும் இளையோர் தேசிய பிரிவுகளிலும் புதிய தேசிய சாதனைகளாகப் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கான 58 கிலோ கிராம் எடைப் பிரிவு பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் பிரதாபன் நிலோஜினி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் (ஸ்னெச் 53 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 67 கி.கி.) மொத்தமாக 120 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

90 கிலோ கிராம் மற்றம் அதற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் வட மாகாணத்தின் மேரி லக்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவர் (ஸ்னெச் 44 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 56 கி.கி.) மொத்தமாக 100 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.