வவுனியாவில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கிய இராணுவத்தினர்!!

546


வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தின் மாணவர்களின் குடி நீர் தேவைக்காக இராணுவத்தினரின் உதவியுடன் குடி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்க பொலிசாரின் ஏற்பாட்டில் இராணுவத்தினர் 1500 லீற்றர் குடி தண்ணீரை நேற்று (19.07) வழங்கியுள்ளனர்.



பாடசாலை சமூகத்தின் கோரிக்கையை ஏற்று 12 ஆயிரம் லீற்றர் அடங்கிய ஒரு பவுசர் நீரை இராணுவத்தினர் எடுத்து வந்த போதிலும் 1500 லீற்றர் தண்ணீர் தாங்கியே பாடசாலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக மிகுதி நீரை மீண்டும் இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 12.07.2018 அன்று பாடசாலை அதிபரால் செட்டிக்குளம் பிரதேச சபைக்கு குடி நீர் வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கபட்ட போதும் பிரதேச சபையானது ஒரு பவுசர் குடி நீருக்கு 1500 ரூபா பணம் செலுத்துமாறு பாடசாலையை கோரியுள்ளது.



அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தின் செயலாளருக்கும் எழுத்து மூலம் கடிதம் வழங்கப்பட்ட போதும் குறித்த பாடசாலை மாணவர்களின் குடி நீர் தொடர்பாக மனிதாபிமான ரீதியில் கூட அக்கறை காட்டப்படவில்லை, என பொதுமக்கள் விசனம் வெளியிட்டனர்.



குறித்த கிராமமானது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களை கொண்ட கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.