வவுனியாவில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம்!!

683

நுண்நிதி கடன் தொல்லை காரணமாக பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்ற நிலையில் இதனை தவிர்ப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வவுனியா – சாந்தசோலைக் கிராமத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களின் நன்மை கருதி நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீளப் பெற்றுக்கொள்ளவும் புதிதாக நுண்நிதி கடன்களை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

மாதர் சங்கமும், இளைஞர் கழகமும் சனசமூக நிலையமும் எடுத்துக்கொண்ட தீர்மானம் எனத் தெரிவித்து சாந்தசோலைப்பகுதியில் இது தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை சாந்தசோலையில் வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தடை செய்துள்ளதுடன் பணியாளர்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுமாறு கோரி மாதர் சங்கத்தினால் குறித்த நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், நேற்றுபிற்பகல் சாந்தசோலையின் சில பகுதிகளில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம் இன்றிலிருந்து சாந்தசோலைக் கிராமத்திற்குள் வழங்கப்பட்ட நுண்நிதிக்கடனை மீளப்பெற்றுக் கொள்ளவும் மேலும் புதிதாக நுண்நிதிக்கடன் வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம் என எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.