மூன்றாவது நாளாகவும் முடங்கியுள்ள ரயில் போக்குவரத்து : பெரும் சிரமத்தில் மக்கள்!!

328


புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படும் என அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.



தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் புகையிரத தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தது.



இந்த பணிப்புறக்கணிப்பில் புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.



அத்துடன், இந்த போராட்டத்திற்கு புகையிரத கண்காணிப்பு முகாமைத்துவத்துக்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.


இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், அரசு மற்றும் தனியார்துறை அலுவலக பணியாளர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சில புகையிரத நிலையங்களில் பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. எனினும், புகையிரத பணியாளர்களின் போராட்டம் இன்றும் தொடரவுள்ளது.


புகையிரத சாரதிகளுக்கு கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.