விமானத்தில் மதுபானம் அருந்திய பெண் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட கொடுமை!!

374


விமான பயணத்தின் இடையே மது அருந்திய பிரித்தானிய தாயார் ஒருவர் தமது 4 வயது மகளுடன் துபாயில் சிறைவாசம் அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் தமது 4 வயது மகளுடன் ஐக்கிய அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார் பல் பருத்துவரான 44 வயது Ellie Holman.



துபாயை பொறுத்தமட்டில் பொதுவெளியில் மது அருந்துவதும், மது அருந்திவிட்டு பொதுவெளியில் நடமாடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் அதிகாரிகளால் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.



இதில் மருத்துவர் Ellie Holman சிக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள், வேறு எவருடனும் அவர் தொடர்பு கொள்ளாதவாறு விமான நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.



பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை கைதியாக 3 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். மட்டுமின்றி விசாரணை முடியும் மட்டும் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.


குறித்த விவகாரம் தொடர்பாக சட்ட உதவிபெற இதுவரை சுமார் 30,000 பவுண்ட்ஸ் வரை செலவானதாக கூறும் மருத்துவர் எல்லி, இதுவரையான தமது சேமிப்பு எல்லாம் கரைவது மட்டுமல்ல, பணிக்கு திரும்பவும் முடியாமல் அல்லல்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி மருத்துவர் எல்லி தமது 4 வயது மகளுடன் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றுள்ளார்.


அவருக்கு உணவுடன் ஒரு கோப்பை திராட்சை மது வழங்கப்பட்டுள்ளது. துபாயில் தரையிறங்கியதும் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவரது விசாவானது காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர் மது அருந்தியுள்ளதாகவும், அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்த 3 நாட்களும் போதிய உணவு, மாற்று உடை என எதுவும் வழங்கப்படவில்லை எனவும், கழிவறை கூட சுத்தமாக இல்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் எல்லி குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.


விசாரணை முடியும் வரை எல்லி துபாய் விட்டு வெளியேற முடியாது என்பதால் தமது நண்பர்களுடன் தற்போது தங்கி வருகிறார்.