வவுனியாவில் இரவில் வீடுகளுக்குச் சென்று கடன் பணம் வசூலிக்கும் நுண்நிதி நிறுவன ஊழியர்கள்!!

410

வவுனியா கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளிலுள்ள பெண்கள் நேற்று மாலை வீதியில் ஒன்றுகூடி நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் பணத்தைச் செலுத்த முடியவில்லை எனவும் இரவு வேளைகளில் தமது வீடுகளுக்கு நுண்நிதி நிறுவன ஊழியர்கள் வருவதற்கு தடைவிதிக்குமாறும், பெற்றுக்கொண்ட கடன் பணத்தைச் செலுத்தவதற்கான வழிமுறைகள் தற்போது காணப்படவில்லை எனவே அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப் ஊழியர்கள் பணத்தை வசூலிப்பதற்கு நீண்டநேரமாக வீடுகளின் முன்னால் காத்திருந்து வருவதாகவும் இதனால் கடன் பெற்றுக்கொண்ட குடும்பப் பெண்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இன்னும் சிலர் வீடுகளுக்குள் ஒழிந்துகொண்டு வெளியே சென்றுவிட்டதாக தெரிவித்து வருவதாகவும் நாளுக்கு நாள் கடன் பெற்றுக்கொண்ட நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்வதாகவும் நேற்று முன்தினம் குறித்த ஒரு நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்கள் பெண் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாகவும்,

இரவு 8 மணிக்கு பணத்தினை வசூலிப்பதற்காக வீடுகளுக்குச் சென்றுவருவதாகவும் அதிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அல்லது தமக்கான நிவாரணம் ஒன்றினைப் பெற்றுத்தருமாறும் கோரிவருகின்றனர்.

வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் இன்றி வீட்டில் வருமானம் இன்றியும் கணவருக்கு தொழிலின்றிய நிலையும் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. நாளாந்தச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. எனவே நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன் பணத்தைப்பெற்றுக்கொள்வதற்கு குடும்பப் பெண்கன் மீது பல்வேறு அச்சுறுத்தல்களையும் திணித்து வருகின்றன.

இதனால் கடந்த வாரம் முதல் கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் பணத்தினைச் செலுத்த முடியவில்லை. இக்கடன் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு தமக்கான நிவாரணம் ஒன்றினை பெற்றுத்தருமாறு அப்பகுதியில் நேற்று மாலை ஒன்றுகூடிய பெண்கள் கோரியுள்ளனர்.