கேரளாவில் ஒரு தாயின் பாசப்போராட்டம்!!

266

கடவுளின் தேசமான கேரளா இன்று தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. தற்போதுவரை 374 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனி என்பவர் வசித்து வந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளம் வீட்டுக்குள் வந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது காலை 5 மணி. இவரும் இவரது கணவரும், இரண்டு குழந்தைகளையும் தூக்கிகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.

10 வயது மகள் மற்றும் 4 வயது மகன் ஆகிய இருவரையும் ரஞ்சனியும் அவரது கணவனும் தோளில் தூக்கிகொண்டனர். 4 வயது மகனை தனது நெஞ்சில் அணைத்துக்கொண்டார் ரஞ்சனி. இவர்கள் நடந்துசெல்கையில், தண்ணீர் அளவு அதிகரித்த காரணத்தால் குழந்தைகள் அச்சத்தில் அழுதுள்ளனர். இதற்கிடையில், மகனுக்கு காய்ச்சல் வந்துள்ளது.

ஆனால், மருத்துவமனை இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. வாகன வசதிகள் ஏதுமில்லாத காரணத்தால், சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தற்போது, குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு நலமாக உள்ளது.