வவுனியாவில் வறிய மக்களின் கல்வி, சுகாதார சேவைகளுக்காக அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளை உதயம்!!

408

ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொது கூட்டம் நேற்று (19.08) மாலை 3 மணியளவில் ஆலய முன்றலில் தர்மகத்தா அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் தலைமையில் பிரதேச செயலாளர் கா.உதயராசா , கிராம சேவகர், வவுனியா வர்த்தக சங்க தலைவர் ச.சுஜன், மற்றும் பொது சபை உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பொற்கோவில் ஆரம்பிக்கப்பட்ட முக்கிய நோக்கங்களில் முதன்மையானதான வறிய மக்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும் வறிய மக்களின் மருத்துவ உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளிற்கான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

இவ் அறக்கட்டளையானது அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டு வறிய மக்களின் கல்வியை தொடர்வதற்காகவும், அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளுடன் இயங்கும் எனவும் வறிய மக்களிற்கான மருத்துவ உதவிகளை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கைகளையும் இவ் அறக்கட்டளையினூடாக மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளையின் தலைவர் அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் தெரிவித்தார்.

இவ் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக வி.குணரட்ணம் (தர்மகத்தா பொற்கோவில்), கா.உதயராசா (வவுனியா பிரதேச செயலாளர்), ச.சுஜன் (வர்த்தக சங்க தலைவர்), கே.சிதம்பரநாதன் (முன்னாள் கல்வியியல் கல்லூரி பீடாதிபதி) , தயாபரன் (சட்டத்தரணி), மதுரகன் (வைத்தியர்), ஏ.அம்பிகைபாகன் (வர்த்தக சங்க செயலாளர்), எஸ்.ஜனார்த்தனன் (ஐ.எஸ்.டி), ஆர்.சிவாநந்தன் (வூஸ்க்), எம்.விஜயகாந்தன் (கீதா ஸ்டிகர்) ஆகியோரும் மற்றும் பிரித்தானியாவிலிருந்து பி.ஸ்ரீராஜன், எம்.குருநாதன் (குரு) டைமன் சீ பூட்), விஷ்ணுஜீனோ (வைத்தியர்), பிரான்சிலிருந்து எஸ்.கோபாலகிருஸ்ணன் (வெஷ்கோ கொம்பனி), ஜேர்மன் வி.குகநீதன் (றைவ் & ஸ்ரைல்), கனடாவிலிருந்து `யோசப் ஜெயராஜ் (ஆரத்தி நகையகம்) ஆகியோரும் அந்தந்த நாடுகளில் இருந்து செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காலமும் அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவிலூடாக இடம்பெற்ற சமூக சேவைகள் தொடர்ந்தும் அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவிலூடாக இடம்பெற்ற சமூக சேவைகள் தொடர்ந்தும் அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளையினூடாக கண்ணகை அம்மனின் அருளோடு மேலும் சிறப்பாக இடம்பெறும் என கோவிலின் அறக்கட்டளையின் தலைவர் அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.