வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு : ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள்!!

639

வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு இன்று (13) நகரபிதா இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

கட்சி பேதமின்றி மக்கள் சேவையில் பங்காற்ற வேண்டும் என நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பாரதியார் நினைவு தினத்தில் குருமன்காட்டில் அமைந்துள்ள பாராதியார் சிலையருகில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்ட வேளை நகரசபை தவிசாளர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து நகரசபையின் உப தவிசாளர் நகரசபை தலைவர் கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரத்தியேக செயலாளராக வைத்திருப்பதன் காரணமாக நகரசபை செயற்பாடுகளில் இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் நகரசபையில் செயலாளர் ஒருவர் இருக்கும்போது வெளி ஆட்கள் நகரசபையில் செயலாளராக செயற்பட முடியாது என தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்குவதாக நகரசபை உறுப்பினர்கள் தன் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்திருந்தார்.

பெண்கள் அரசியலில் சேவையாற்றுவது சவாலான விடயமாக இருக்கிறது என தெரிவித்த நகரசபை உறுப்பினர் எஸ்.செபநேசராணி பாரதியார் சிலைக்கு மாலை போட பெண்கள் தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறாயின் அவ்வையாரின் சிலைக்கு ஆண்கள் எவ்வாறு மாலை போட முடியும் என கேள்வி எழுப்பியதுடன் பண்டாரவன்னியன் சிலைக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாலை போட்டதையும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நகரத்தில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக நகரசபை உறுப்பினர் பாஸ்கரன் ஜெயவதனி சுட்டிக்காட்டினார். உடனடியாக கட்டாக்காலி மாடுகளை பிடித்து விபத்துக்களை தடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நகரசபையில் வருமானம் குறைந்துள்ளதாக நகரசபை தலைவர் இ.கௌதமன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இக்குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நகரசபை செயலாளர் ரீ.தயாபரன் தனது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சபை தனது அதிகாரத்தை மீள கையளிக்கும் பட்சத்தில் மூன்று மாதத்தில் நகரசபையின் வருமானத்தை அதிகரித்து காட்ட முடியும் என தெரிவித்ததுடன் நகரசபை தலைவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.