வவுனியா விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விவசாய பிரதி அமைச்சர் நேரில் ஆய்வு!!

951


வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேரில் வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நேற்று(12.09) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.



வவுனியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நீர்பாசன குளங்கள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும், விவசாயிகளுக்கான மானியங்களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது விவசாய நிலங்கள் பல வனஇலாகா அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துடன், விதை நெல் மற்றும் மேட்டுநிலப் பயிர்களுக்கான விதைகளை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.



இதன்போது கருத்து தெரிவித்த பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன்,



விவசாயிகளின் வாழ்க்கை முறை, பொருளாதார முறை முன்னேற்றமடையவில்லை. வடக்கு, கிழக்கு விவசாய மக்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள். வடக்கு, கிழக்கு விவசாய மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எனக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட எமது பிரத்தேசத்தை இன்னும் முன்னேற்ற வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு விவசாய மீள் எழுச்சிக்காக 3 மில்லியன் ரூபாய் நிதியை கோரியுள்ளேன்.

வடமாகாணம் விவசாயத்தின் மூலமே முன்னேற்றமடைந்திருந்தது. தற்போது விவசாயம் பின்தங்கிய நிலையில் உள்ளது. விவசாயத்தை எழுச்சிபெற செய்வதன் மூலமே மீண்டும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.


விவசாய அமைப்பு மற்றும் நீர்பாசன திணைக்களங்களில் வெற்றிடங்களும் பல உள்ளன. அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.