வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

408

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (22.09.2018) காலை 10 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டுவிட்டது.

இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகிவிட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் ஒன்றிணைந்து போராட்ட ஏற்பாட்டு குழுவின் பேச்சாளர் தயா அவர்களின் சிறப்புரையுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிரெலோ, ஈரோஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனினிசக் கட்சி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகை அலங்கார உரிமையாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம், தமிழ் விருட்சம் போன்ற அமைப்புக்கள் பங்கு பற்றியதுடன்,

பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் , பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் , சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் , ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , வவுனியா நகரபிதா கெளதமன், உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் நடராஜசிங்கம், உறுப்பினர்கள், வவுனியா வெங்கல செட்டிகுளம் தலைவர் அந்தோணி, உறுப்பினர்கள் ஆகியோருடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.