டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் ரூபாவின் பெறுமதி : திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

393


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



நாத்தாண்டிய லூர்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

2008ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. டொலருக்கு பெறுமதி இல்லாமல் போனது. இதனால், அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டார்கள் தமது நிதியை வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.



டொலரை கொண்டுவந்த முதலீட்டாளர்கள் தற்போது அதனை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு செல்கின்றனர். அதற்கு பாரிய இலாபத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர். இதனால், அந்தப் பணம் அமெரிக்காவிற்கு செல்கிறது.



எனவேதான், டொலரின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. இந்நிலையில், பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டிலேயே பேணப்படுகின்ற போதும், எரிபொருள் விலை அதிகரிக்கிறது. இதனால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. எனினும், அமெரிக்காவிற்கு மட்டும் இந்தப் பிரச்சினை இல்லை.


இலங்கையின் பங்கு சந்தையின் மூலம் தற்போது 643 மில்லியன் டொலர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. இதன்மூலம் நன்மை, தீமை இரண்டும் உள்ளன.

இந்நிலையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட நாணயமாற்ற வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 170 ரூபா 65 சதமாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.