வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக கோசங்கள்!!

469

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக மாவட்ட செயலக முன்றலை சென்றடைந்துள்ளது.

அதன் பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில், எதிர்கட்சித் தலைவரே காட்டிக் கொடுக்காதே, எதிர்கட்சித் தலைவரே அரசுடன் பேசு, சுமந்திரனை வெளியேற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

குறித்த பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை எனவும் அவர்களை இவர்களுக்காக போராடுமாறும் பொது அமைப்புக்கள் சார்பில் கருத்துரைத்த தயா தெரிவித்துள்ளார்.

இதன்போது மக்கள் கைதட்டி கரகோசம் செய்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொது அமைப்புக்கள் சார்பில் பேசியவர் கருத்துரைத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து அமைதியாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.