வவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கப்படவேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

450

வவுனியா மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களில் புதிய குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் மேட்டுக்காணிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வயல் செய்யக்கூடிய விவசாயக் காணிவழங்கப்படவே இல்லை. அதன் காரணமாக குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளியாகவே கடந்த 20, 30 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்

இவ்வாறு நேற்று மாலை இடம்பெற்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாகாண சபை உறுப்பினரும் வவுனியா மாவடட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது உரையில்,

இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. வவுனியா மாவட்டத்தில் பெருந்தொகையான காடுகளில் முறிப்புக்குளங்கள் நீண்டகாலமாக கைவிடப்பட்ட பல குளங்கள் இருக்கின்றது. ஆகவே என்னுடைய கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றேன். இந்தக்குளங்களை இனங்கண்டு இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் எத்தனை, வயல்காணி அற்ற குடும்பங்கள் எத்தனை என்பதைக் கணக்கீடு செய்து அந்தக்குடும்பங்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயல் காணியை வழங்குவதற்கு இந்தப்பாழடைந்த கைவிடப்பட்ட குளங்களைப்பயன்படுத்தலாம்.

எனவே 2019ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை வவுனிய மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.