வவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி!!

655

அரசியல் கைதிகளில் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரிய நடைபவனி இன்று (12.10.2018) காலை வவுனியாவினை வந்தடைந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக இயக்கச்சி, மாங்குளம், ஒமந்தை ஊடாக இன்று(12.10.2018) காலை வவுனியா நகரை வந்தடைந்தது. இப் பேரணி நாளையதினம் அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபவணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாண்டிக்குளத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளை பொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு பேரணியுடன் இணைந்தனர்.

ஏ9 வீதியுடாக பயணித்த பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பஜார் வீதியுடாக மீண்டும் ஏ9 வீதியினை வந்தடைந்தது.

இதன் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றினைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கோசங்களை எழுப்பி போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நடைபவணியாக வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக மதவாச்சி நோக்கி நடைபவணிக்கு ஏ9வீதியில் அமைந்துள்ள மதவுவைத்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் அந்தனர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இன்று மாலை மதவாச்சி நோக்கி செல்லவுள்ளதுடன் நாளையதினம் அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளது.