வவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா!!

515


வவுனியா மாளிகை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட அலைகல்லு போட்ட குளம் கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா இன்று (13) கிராம அலுவலர் நா.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

முயற்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.ச.பிரியதர்சினி பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.



நிகழ்வில் அதிதிகள் மற்றும் வயோதிபர்கள் மாலை அணிவித்து அலைகல்லு போட்ட குளம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

சிறுவர்களின் குழுப்பாடல், கிராமிய நடனங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றதுடன் நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் முயற்சி அறக்கட்டளையின் நிறுவனர் கே.கே.சந்திரகுமாரினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.



முதியோர்களை கௌரவித்து அவர்களுக்கான பரிசில்களை வவுனியா விஜியா பில்டர்ஸ் உரிமையாளர். கு.விஜயரத்தினத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அசிரியைக்கான பரிசில்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஆர்.ஏ.அமிலியா வழங்கி வைத்தார்.



நிகழ்வில் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அதிதிகளால் கௌரவம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சிறுவர்களுக்கான கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.


முயற்சி அறக்கட்டளையின் ஒரு கிராமத்திற்கு நூறு மரம் என்கிற செயற்திட்டத்தின் கீழ் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன், மாளிகை கிராமத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுரேன், நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் க.ஜெயக்குமார், அலைகல்லு போட்டகுளம் வீரமாமுனிவர் வித்தியாலயத்தின் அதிபர் ச.சிவகணேசன் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.அ.பிரகாசினி, கிரம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.