நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் : விரதம் இருக்கும் இளம்பெண்!!

315


நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என 41 நாட்களாக விரதம் இருந்து வரும் கேரள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.



இந்த தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர இருந்தது. அதனைத் தொடர்ந்து, கேரளாவின் பல பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) எனும் பெண் சபரிமலைக்கு செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். அத்துடன் தனி ஆளாக சபரிமலைக்கு செல்லும் உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘நான் கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரும் ஆண்டும், மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன்.



ஆனால், என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், இந்த ஆண்டு வழக்கம் போல் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன்.


எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்களும் இருக்கிறார்கள். இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன்.

கடவுளை தரிசிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளார். அத்துடன் தனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.