வவுனியாவில் விநாயகர் ஆலயத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி முறியடிப்பு!!

467

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக மக்கள் விசனமடைந்துள்ளனர். இதுபற்றி தெரிய வருவதாவது,

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டுவரப்பட்டது. இதே வேளை இவ் கோவில் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னால் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டடபொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி தமது வேலைகளை நேற்று முன்னெடுக்கவிருந்த நிலையிலேயே பொதுமக்களினால் இவ்வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்,
இவ்வாலயம் பரம்பரை பரம்பரையாக நாம் வழிபட்டு வருகின்றோம். ஆனால் தற்போது இவ்வாலயத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தம் என்ற ரீதியில் புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாக தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடியதுடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடன் இது தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடியிருந்ததுடன்,

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடம் வந்த பொலிஸாரினால் ஆலய பரிபாலனசபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளையும் முன்னெடுத்திருந்ததன் அடிப்படையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளரிடம் கேட்கப்பட்டபோது இவ்விடம் அனுராதபுரம் காலத்து புராதான சின்னங்களாகும் இவை அழியாமல் தடுப்பதற்காக இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாக கூறியிருந்தார்.