சர்கார் விஜய்க்கு இது நல்லதல்ல : எச்சரிக்கை விடும் அரசியல் தலைவர்கள்!!

565

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சர்கார்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வெற்றிப்படங்களான துப்பாக்கி, கத்தி சமூகத்திற்கு தேவையான ஏதேனும் ஒரு கருத்தினை மையப்படுத்தியிருக்கும்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் சர்கார் படமும், ஓட்டுரிமை மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறது.

படத்தில் வரும் ஒரு காட்சியில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை பொதுமக்கள் தீயில் வீசி எறிவார்கள். இந்த நிலையில் படம் பற்றி பேசியுள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகர். இது அவருக்கு நல்லதல்ல. எனவே சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

முன்னதாக பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் படம் பற்றி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.