கஜா புயலின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!

327

தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியதில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணிநேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் வேதாரண்யம்-நாகை இடையே இந்த புயல் கரையைக் கடந்தது. ஆனால், இந்த புயலின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்தன.

கஜா புயல் ஏற்படுத்திய சேதங்கள் தொடர்பாக பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கஜாவின் கோர தண்டவத்திற்கு 18 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 5 பேர் மேலும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.