பதவி விலக தயார்? மஹிந்தவின் அதிரடி அறிவிப்பால் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்!!

217


உரிய முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை விட்டு விலகிச் செல்லத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



கசாகல பூராண விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாடாளுமன்றம் நாடகக் கொட்டகைக்கு நிகராக காணப்படுகின்றது. சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்தப் பதவியை விட்டுச் செல்லத் தயார்.



நாடாளுமன்றிற்குள் கத்தி கொண்டு வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், நாட்டு மக்களிடம் பிரச்சினைக்கு தீர்வு கேட்க வேண்டும்.


வாக்காளர்களிடம் அதிகாரத்தை வழங்கினால் யாருக்கும் எவ்வித சிக்கல்களும் கிடையாது. நாம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம் யாருக்கும் பயந்து கொண்டு தப்பிச் செல்ல மாட்டோம்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை வேறு எவரினாலும் எடுத்துக் கொள்ள முடியாது. நாம் இதனை விட்டுச் செல்ல தயார், எனினும் பலவந்தமாக அவமானப்படுத்தும் வகையில் செய்தால் அதனை ஏற்க மாட்டோம். நீதிமன்றினால் கூட ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


-தமிழ்வின்-