வவுனியாவில் சட்டவிரோத கடைகள் மீள்புனரமைப்பு : தடையுத்தரவு பிறப்பித்த உபதவிசாளர்!!

407

வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கடைகள் இன்று (17.11.2018) காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்கள் இன்றையதினம் காலை மீள்புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் வவுனியா நகரசபை தலைவர் உட்பட பலருக்கு தகவலை தெரிவித்திருந்த போதிலும் எவருமே பல மணிநேரமாக அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை.

நீண்ட நேரத்திற்கு பின்னர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (19.11.2018) வரை புனரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துடன் திங்கட்கிழமை வவுனியா நகரசபைக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவினை பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரிடம் கேட்டபோது, குறித்த வியாபார நிலையத்திற்கு தகரம் போட்டிருந்தனர். மழைக் காலத்தில் தண்ணீர் வருவதாக தெரிவித்து சீட் போடுகின்றனர்.

இக் கட்டிடம் புனரமைப்பு செய்யமுடியாது. அவர்கள் சிமெந்து மூலம் ஏதேனும் கட்டடங்கள் விஸ்தரிப்பு செய்தால் மட்டுமே எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் தகரத்தினை கழற்றி விட்டு சீட் போடுவதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.

குறித்த வியாபார நிலைய சட்டவிரோத கட்டிடம் வடிகால் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் அமைந்துள்ளதுடன் இச் சட்டவிரோத கட்டிடங்களுக்கு மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.