வவுனியாவில் சுருட்டு உற்பத்தியாளர், விற்பனையாளருக்கு நீதிமன்றம் 12ஆயிரம் ரூபா அபராதம்!!

341

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு எச்சரிக்கை இன்றியும், உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் சுருட்டு தயாரித்த உற்பத்தியாளருக்கும் அதனை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இன்று நீதிமன்றம் இருவருக்கு 6ஆயிரம் வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது உடல்நலம் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை, தார், நிகேட்டின் உள்ளீட்டைக் குறிக்கும் சிட்டுத்துண்டுகள் இன்றியும் உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 31 புகையிலை சுருட்டு பண்டல்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மேற்படி புகையிலைச் சுருட்டை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உற்பத்தியாளர் ஆகிய இருவருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு அமைவாக இருவருக்கும் தலா 6ஆயிரம் ரூபா வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட புகையிலைச்சுருட்டை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.