மோசமாக நடந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

339

நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் நடத்தைகளுக்கு விரோதமான முறையில் மோசமாக நடந்துக்கொண்டமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் மோசமாக நடந்துக்கொண்ட உறுப்பினர்கள் சிலரை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அனுப்புவது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.

திலும் அமுனுகம, பிரசன்ன ரணவீர, ரஞ்சித் சொய்சா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவங்ச, அருந்திக்க பெர்னாண்டோ மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அனுப்புவது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்திய திலும் அமுனுகம, சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றி, மிளகாய் தூள் கலந்த தண்ணீரை கொண்டு தாக்கிய பிரசன்ன ரணவீர, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக்க பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தின் உணவகத்தில் இருந்து கத்தியை எடுத்து வந்து சபையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பாலித தெவரப்பெரும,

சபாநாயகர் மீது குப்பை வாளியை வீசி தாக்கிய ரஞ்சித் சொய்சா, நாற்காலி மற்றும் புத்தகங்களில் சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவங்ச ஆகியோர் சம்பந்தமாக தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் சிறப்புரிமை குழு கவனம் செலுத்த உள்ளது.

8வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரில் பிறப்புரிமை குழுவில் 10பேர் அங்கம் வகித்தனர். அதன் தலைவராக திலக் மாரப்பன கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.