இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை : ஜி.ரி.லிங்கநாதன்!!

322

இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – சிதம்பரபுரம், பழனிநகரில் நேற்றைய தினம் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் தொலைக்காட்சி ஒன்று என்னை தொடர்பு கொண்டு இவ்வாறு கேட்டிருந்தது, நாங்கள் மூன்று பேர் மாகாணசபையிலிருந்து போயிருந்தோம். பெண் பிள்ளைகளையும், சிறுவர்களையும் மாகாணசபைக்கு கூட்டிக் கொண்டு செல்ல முடியாதுள்ளது. ஏன் நீங்கள் இவ்வாறு நடக்கின்றீர்கள் என்று கேட்டிருந்தது.

நான் கூறினேன், அப்படி ஒன்றும் நடக்கவில்லையே ஒரு மக்கள் பிரதிநிதிகள் மாவட்டம் சார்ந்தவர்கள், கட்சி சார்ந்தவர்கள் உண்மையான விடயங்களில் பிழையாக நடந்தால் அதனை தட்டி கேட்போம். அதற்காக குரல் கொடுப்போம் என்று கூறினேன்.

தற்போது நாடாளுமன்றத்தில் நடக்கின்ற விடயத்தை பார்க்கும்போது ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை கைப்பற்றுவதற்காக முயற்சி செய்திருந்தார். அதனை நாங்கள் தடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்திருந்தோம்.

மற்றும்படி ஒருநாளும் மிளகாய்பொடியோ அல்லது கத்தியோ இலங்கை நாடாளுமன்றத்தில் நடக்கின்ற கேவலமான விடயம் ஒன்றும் மாகாண சபையில் நடக்கவில்லை என நான் ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன்.

அதேநேரம் இன்னுமொரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இன்று மூன்று தனி நபர்கள், மூன்று தலைவர்கள் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்காக இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி கொண்டிருக்கின்றார்கள்.

இன்றுவரை நாடாளுமன்றத்தை கூட்டுவதா, கலைப்பதா என்ற ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். இந்த விடயங்கள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் சிரியாவில் ஏற்பட்ட நிலைதான் இலங்கைக்கும் ஏற்படும். சிரியாவில் உள்ள பிரச்சினைகள் உங்களுக்கு தெரியும்.

அங்கே இருக்கின்ற ஜனாதிபதியை அகற்றுவதற்கான ஒரு முயற்சியும், அதை தடுப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் தான் இன்றைக்கு பல லட்சம் மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டிருக்கின்றமைக்கு காரணமாகும்.

இப்போதும் ஜனாதிபதி அவர்களும் ஏற்கனவே இருக்கின்ற இரண்டு பிரதமர்களும் கட்சி பேதங்களை மறந்து உடனடியாக இந்த நாட்டில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை தடுக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் மூன்று பேரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆகவேண்டும்.

இல்லை என்றால் இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என மேலும் தெரிவித்திருந்தார்.