இன்னும் சாகாமல் உட்கார்ந்திருக்கின்றோம் : கண்ணீர்விட்ட மக்கள் : கலங்கிப்போன நடிகர் சூரி!!

406

 

கலங்கிப்போன நடிகர் சூரி

கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்களாக தங்கி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நடிகர் சூரி, அங்குள்ள மக்களின் நிலை குறித்து பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் டெல்டா மாவாட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களுக்குக் கடந்த மூன்று நாள்களாக ஆறுதல் கூறி வருகிறார் நடிகர் சூரி. அவர் கூறுகையில், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர்செய்யப்படவில்லை.

இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது. தஞ்சாவூரில் பல கிராமங்களைச் சுற்றி வந்துவிட்டேன். மிகப் பெரிய துயரத்துக்கு இந்த மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஊருக்குள் நுழையவே முடியவில்லை. இந்த மக்கள் மீண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகும்.

ஒவ்வொருவரின் கதைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. நான் வளர்த்த தென்னம்பிள்ளை, என்னைக் கைவிட்டுப் போயிருச்சு, இன்னும் சாகாம உக்காந்திருக்கோம்யா என மக்கள் கதறியழுகிறார்கள்.

தென்னை மரங்களை இழந்த ஒரு விவசாயி என்னிடம் பேசும்போது, `நான் கட்டியிருக்கிற இந்த வெள்ளை வேட்டிதான் கடைசின்னு நினைக்கிறேன். இனி இதைக் கட்டறதுக்கு எனக்கு லாயக்கில்லை என வேதனைப்பட்டார்.

நேற்று வரையில் முதலாளியாக இருந்தவர்களெல்லாம் இன்று தொழிலாளியாக மாறிவிட்டார்கள். அனைவரும் சமமாக இருப்பது நல்ல விடயம்தான். இப்படிப்பட்ட துயரம் மூலமாக, இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என வேதனையுடன் கூறியுள்ளார்.