வவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு!!

353


வவுனியா நகரசபையின் எழுநீ பண்பாட்டு முற்றம் நடத்திய பல்துறை சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (02.12) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சார் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.



மங்கள வாத்தியங்கள் முழங்க பவனியாக அழைத்து வரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிதிகள், பல்துறை சேவையாளர்கள் மாலை அணிந்து வரவேற்கப்பட்டதுடன் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும் இந் நிகழ்வில் விசேட தேவைக்குட்பட்டோர், வைத்தியர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.



நீதியரசரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரனால் ‘எழுநீ’ ஆவண நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதல் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் நகரபிதா இ.கௌதமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பல்துறை சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


மீனவ நடனத்தை வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் சிங்கள நடனத்தை உடரட்ட நட்டும வவுனியா தெற்கு கலாசார குழுவினர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தவர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.