வவுனியா வைத்தியசாலையில் கண் அறுவைசிகிச்சை முகாம் மூலம் 135 பேர் பலனடைந்தனர்!!

678

கண்புரை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 135 நோயாளர்களிற்கு இருநாட்களில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கந்தசாமி செந்தூர்பதிராஜா தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்..

வவுனியாவில் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கண்சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் கண்புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு காத்திருப்போரின் பட்டியல் நீண்ட எண்ணிக்கை உடையதாக காணப்படுகின்றது.

எனவே அவர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களிற்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் செயற்திட்டம் ஒன்று கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. இரு தினங்களிலும் 135 நோயளார்களிற்கு வெற்றிகரமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டுள்ளது.

குறித்த சிகிச்சையானது சுகாதார அமைச்சினால் அனுப்பட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா பாணகல தலைமையிலான வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களை கொண்டகுழுவே சத்திரசிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சத்திர சிகிச்சைக்கான நிதி உதவியை புணர்வாழ்வும், புதுவாழ்வும் (Assist Resettlement Renaissance) என்ற நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சத்திரசிகிச்சை மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்றதாக கூறும் வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர், வசதி வாய்ப்புகளற்ற ஏழை மக்களிற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதன் ஆரம்ப நிகழ்வு கடந்தவாரம் 1ம், 2ம், திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா, புணர்வாழ்வும், புதுவாழ்வும் நிறுவனத்தின் முக்கியஸ்தர் சர்வேஸ்வரன், வவுனியாவிற்கான இணைப்பாளரான நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா, ஹென்றி, மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது முகாம் எதிர்வரும் ஏழாம், எட்டாம் திகதிகளிலும் வவுனியாவில் மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.