பிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு!!

253


ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு மக்கள் விடுதலை முன்னணியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறுவதை நாம் அவதானிக்கின்றோம்.



எதிர்காலத்தில் வழக்குகளில் இருந்து காப்பாற்றுகின்றேன். அதனால் பிரதமர் பதவியை வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க கூற முற்படுகின்றார்.



எனினும், அரசுக்கு எதிராக எவரும் சூழ்ச்சிகளில் ஈடுபடமுடியாது. சூழ்ச்சிகளை முறியடிக்கவே நாம் இருக்கின்றோம். 122 பேர் தனக்கு ஆதரவு வழங்குவதகாக ரணில் கூறுகின்றார்.


அதனால் பிரதமராக வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். எனினும், ரணிலுக்கு 122 பேர் ஆதரவு வழங்கவில்லை. நாடாளுமன்றில் இதுவரை 122 அல்லது 123 பேர் வாக்களித்துள்ளனர்.

அது சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்குகளாகும். அது ரணிலை பிரதமராக்குவதங்கு வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. ஏனைய கட்சிகளுடன் இணைந்து 113 பேரின் ஆதரவை பெற்றுக்கொள்வாரா என்பது எமக்கு தெரியாது.


எவ்வாறாயினும், ரணில் பிரதமராகுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோது உதவ மாட்டோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.