வவுனியா பழைய பேரூந்து நிலையம் நாளை முதல் மீளத்திறப்பு!!

486


 

பழைய பேரூந்து நிலையம்



வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக நாளை(07.12) முதல் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சகல பேருந்துகளும் வந்து செல்வதற்கு இன்று (06.12.2018) காலை ஆளுநர் தலைமையில் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.





இன்று ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து பல தரப்பினர் வர்த்தகர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பல கலந்துரையாடல்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.


இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன், உறுப்பினர் கே.கிருஸ்ணமூர்த்தி, மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ். எம்.தென்னக்கோன், வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர், வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளர்,


வடமாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து இதன் போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் இணக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து நாளை முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் முடிவு மேற்கொண்டு தொடர்புபட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினத்திலிருந்து சகல பேருந்துச் சேவைகளும் பழைய பேருந்து நிலையத்தினூடாக வந்து செல்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுஜன் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்து சேவைகளும் மேற்கொண்டுள்ளதால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.  இதனால் பாடசாலை மாணவர்கள்,
பொதுமக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்புரியும் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


அத்துடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்த வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை இன்றி ஐந்திற்கும் மேற்பட்ட வாத்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாகாண ஆளுநருடன் வர்த்தகர் சங்கத்தின் பெரு முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடலில் பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறந்து சகல பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு இணக்கம் ஏற்பட்டு வடமாகாண ஆளுநரினால் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.