வவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை!!

622


மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை



வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் இன்று (06.12.2018) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது என அனர்த்த ஒத்திகை இடம்பெற்றது.



வவுனியா பாவற்குளம் நீர் நிரம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென குளம் உடைப்பெடுத்தால் குளத்தின் நீர் செல்லும் பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களான, பாவக்குளம் படிவம் 01, 04, 05, 06, சூடுவெந்தபுலவு, ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிநகர் போன்ற கிராமங்களிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து பராமரிப்பது என்பது தொடர்பான அனர்த்த ஒத்திகை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபாவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.




இப்பாரிய ஒத்திகையின் போது ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிப்பு மற்றும் முதலுதவி, மருத்துவ ஒத்திகைகள் செய்யப்பட்டதுடன், கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உதவிகளை மேற்கொண்டனர்.


இவ் ஒத்திகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.