நோய்களில் இருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றே தேவை : வைத்தியர் தே.அரவிந்தன்!!

1214

 

வைத்தியர் தே.அரவிந்தன்

சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது.

சிறுநீரக நோய்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, தெகியத்த கண்டி போன்ற பகுதிகள் அடையாளம் கண்டறியபட்ட போதிலும் இன்று கணிசமான அளவு சிறுநீரக நோயாளர்கள் வட மாகாணத்திலும் உள்ளமை கவலை அடைய செய்கின்றது.

கடந்த 5 வருடங்களில் செட்டிகுளம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பல புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பல உறவுகளையும் இந்த நோய்க்கு காவு கொடுக்க நேரிட்டுள்ளது.

இன்று இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த மனித வாழ்க்கையில் நாமும் சேர்ந்து வேகமாக பயணிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது. இதனால் ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை.

இதனால் பல குணபடுத்த கூடிய நோய்கள் கூட இம்மனித வர்க்கத்தை சத்தமில்லாமல் அழித்து கொண்டிருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் இழப்புக்களை சந்தித்த மக்களை மேலும், தடுக்க கூடிய சிறுநீரக நோய்கள் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறுநீரக நோய்கள் இரண்டு பெரும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காரணம் கண்டறிந்த சிறுநீரக நோய்கள் என்றும், காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்கள் (CKD- U ) என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம்.

அண்ணளவாக 15% மக்கள் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளதுடன் இதற்கான சரியான காரணங்களோ அல்லது தடுப்பு முறைகளோ இன்னும் விஞ்ஞான ரீதியில் கண்டறியப்படவில்லை என்பதும் ஒரு கவலைக்கிடமான விடயமாகும்.

வட மாகணத்தை பொறுத்தவரை இந்த நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சரியான நோயாளர்களின் எண்ணிக்கையையும், இந்த சிறுநீரக நோய்தாக்க விளைவுகளையும் கண்டறிய சுகாதார அமைச்சு பல வேலை திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

யுத்த சூழ்நிலையின் முடிவும் பரந்து வரும் சுகாதார வசதிகளும் இப்படி வடக்கில் மறைந்து வாழும் சிறுநீரக நோயாளர்களை காட்டிக் கொடுப்பதும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

இன்றும் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் இந்த காரணம் தெரியாத சிறுநீரக (CKD U ) நோய்களுக்கு அதிகளவு முக்கியத்தும் கொடுத்து பெருமளவில் தடுப்பு முறைகள் விழிப்புணர்வுகளையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்ற போதும் காரணம் தெரிந்த குணபடுத்த கூடிய சிறுநீரக நோய்க்களுக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது.

இப்படியான தீர்க்கக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய சிறுநீரக நோய்களினால் எமது உறவுகளின் உயிர்கள் காவு கொள்ளப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் சிறுநீரக நோய்கள் என்றால் என்ன என்று நாம் பொதுவாக வினவினால் 10 பேரில் 6 பேர் அது குடிநீரில் இருக்கும் மாசுகளால் தான் வருகின்றது என்றும் சிறுநீரக நோய்கள் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டத்தில் தான் அதிகளவு காணப்படுகின்றன என்றும் பதிலளிப்பார்கள்.

ஆனால் இந்த கூற்றை நாம் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் சிறுநீரக நோய்களுக்கும் குடிநீருக்கும் ஆன தொடர்புகள் இன்னும் சரியான முறையில் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காரணம் கண்டறியப்பட்ட சிறுநீரக நோய்களுக்கான முக்கிய காரணங்களாக நீரிழிவு நோயும், குருதி அமுக்கநோயும் இனம் காணப்படுள்ளது. இந்த நோய் உடையவர்களின் சிறுநீரக தொழிற்பாடுகள் நீண்ட காலத்தில் குறைவடைவதற்கு வாய்புக்கள் இருக்கின்றது .

ஆனால் இந்த நோய்கள் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஆபத்தில் இருந்து நோயாளர்கள் தமது சிறுநீரகத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது இன்றும் பல நோயாளர்களுக்கு தெரியாமல் உள்ளது.

இதை விட நமக்கு தெரிந்த அல்லது நாம் அலட்சியப்படுத்தும் சில நோய் அறிகுறிகள் உங்கள் சிறுநீரகத்தை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிடும்.

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் எரிச்சல், சிறு நீர் மெதுவாக வெளியேறுதல், அடைப்பு சிறுநீரக கழித்தல், சிறுநீர் கட்டுப்பாடு இன்றி வெளியேறுதல் என்பவை எமது அன்றாட வாழ்க்கை முறைகளை பாதித்து விட்டாலும் இவை சிறுநீரக நோயாளர்களுக்கான ஆரம்ப அறிகுறிகளாகவே அமையலாம்.

எமது அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை இதனோடு ஒப்பிடும் போது இந்த நோய் அறிகுறிகளை நாம் பெரிதுபடுத்துவது இல்லை, ஆனால் இந்த ஆரம்ப அறிகுறிகள் வளர்ந்து முற்றி தீர்க்க முடியாது என்ற ஒரு நிலையிலேயே நோயாளர்கள் வைத்தியர்களை அணுகுகின்றனர்.

இந் நிலையில் எமக்கு இந்த குணபடுத்த கூடிய சிறுநீரக நோய்களை நிரந்தமாக மாற்றுவதோ அல்லது சிறுநீரக தொழிற்பாட்டை காப்பற்றுவது என்பதோ ஒரு கடினமான வேலையாகவே உள்ளது. இந்த இலகுவான தெளிவான அறிகுறிகள் ஒரு மருத்துவ பிரச்சினை என்றே தெரியாமல் பல பேர் வாழ்ந்து வருவதே இந்த வகையான சிறுநீரக நோய்களின் வெற்றிக்கு காரணமாகும். சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது சிறுநீரக நோய்களுக்கான ஒரு முக்கிய அறிகுறியாகும்.

ஆனால் எங்களில் எத்தனை பேர் சாதாரண சிறுநீரின் நிறம் பற்றிய அறிவையோ அல்லது சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பவர்களாகவோ உள்ளனர் என்று கேட்டால்அது விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

சிறுநீர் இரத்தமாக வெளியேறுவது என்பது சாதாரண சிறுநீரக கிருமி தொற்றில் இருந்து சிறுநீரக புற்று நோய் வரைக்குமான ஒரு எச்சரிக்கையாக இருக்கலா, அதை விட சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கல் தோன்றுவதத்கும் இது ஒரு அறிகுறியாக அமையலாம்.

சிறுசிறுநீரக கற்கள் என்பது இலங்கையை பொறுத்தவரையில் ஒரு பொதுவான பிரச்சினையாக காணப்படுகின்ற போதும் மக்களிடையே இதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தாங்க முடியாத இடுப்பு வலியுடன் வரும் நோயாளர்களில் 40 வீதமானவர்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதில் பெரும்பான்மையானவர்கள் சிறுநீரக கற்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இதற்கு விதிவிலக்கு ஆகிவிட முடியாது .

சிறுநீரக கற்கள் சிறுநீரக குழாய்களை முற்றாக அடைக்கு பட்சத்தில் அதன் தொழிபாடுகள் முற்றாக முடக்கப்பட்டு சிறுநீரகம் முற்றாக செயல் இழக்கும் நிலையை அடையாளம், இன்றைய தொழில் நுட்ப உலகில் சிறுநீரக கற்களுக்கான கண்டு பிடிப்பு பரீட்சைகளும் சிகிச்சை முறைகளும் மிகவும் எளிதாகி உள்ளன.

வயிறு வெட்டி சிறுநீரக கற்களை அகற்றிய பழைய காலம் மலை ஏறி, இன்று லேசர் மூலம் அநேகமான சிறுநீரக கற்கள் அகற்றும் முறை பிரபல்யம் அடைந்து வருகின்றது.

சிறுநீரக சத்திர சகிச்சை என்றால் வாரக்கணக்கில் வைத்தியசாலையில் தங்க வேண்டும் என்ற நிலமையை மாற்றி பெரும்பாலான சிறுநீரக கற்களை ஒரு பகல் வேளை சத்திர சிகிச்சையாக மாற்றி உள்ள இன்றைய தொழில் நுட்பத்திற்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

எனவே யுத்தம் நிறைவடைந்து நாம் அபிவிருத்திப் பாதையில் செல்லும் போது இப்படிப்பட்ட காரணம் தெரிந்த சிறுநீராக நோய்க்கு இலக்காகமல் இருப்பது முக்கியமாகும்.

இன்று சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது.

தே .அரவிந்தன்
சிறுநீரக – சனனி சத்திர சிகிச்சை நிபுணர்
அனுராதபுரம்