இரவு பகல் பாராது கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் பெண்!!

284


வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த போராட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,



கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவரை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



தனது கணவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால், அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ள அஜந்தனின் மனைவி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.



தனது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்த நிலையில், கடந்த 18 தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான துன்பத்தை தாங்கள் எதிர்நோக்கிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும், தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம் என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இவ்வுண்ணாவிரத போராட்டமானது இரவு பகல் பாராது நடைபெற்று வருவதுடன், இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் அதன் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.