வவுனியாவில் வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

412

 

வீதிகளில் குப்பை

வவுனியாவிலுள்ள வீதிகளில் தமது வீட்டுக்கழிவுகள், வியாபார நிலையத்தின் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அதனைச் செயற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை உபபிதா சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார்மகிழங்குளம் செல்லும் வீதிகளில் வீசப்பட்டுள்ள குப்கைளை அகற்றுவதற்கு அவரது தலைமையில் சென்று ஊழியர்கள் அதனை அண்டிய பகுதிகளை சுத்தப்படுத்தி வீசப்பட்டுள்ள குப்பைகளை அகற்றினர். இதனை மேற்பார்வை செய்யச் சென்ற நகர உபபிதா இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வீதிகளில் குப்கைகளை வீசுவதால் வீதியால் செல்பவர்களுக்கு பல அசௌரியங்கள் ஏற்படுகின்றது. இவ்வீதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமை கண்காணிக்கப்படவுள்ளதுடன் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று வீதிகளில் வீசப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பல ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதில் அவர்களின் முகவரிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது இவற்றை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். வீதிகளில் வீட்டுக்கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், குறிப்பாக கோழிக்கழிவுகளே அதிகமான காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தமது பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும்போது நகரும் சுத்தமாகிவிடும் இவ்வாறு வீதிகளில் தமது குப்கைகளை வீசுவதால் உங்களுடைய பிள்ளைகளும் குடும்பங்களுமே பாதிக்கப்படவுள்ளன.

இவ்வாறன நடவடிக்கையினை இனிவருகாலங்களில் நிறுத்தி நகரசபை தொழிலாளர்கள் குப்பை அகற்ற வருபவர்களிடம் தங்களது குப்பைகளை கொடுக்கவும் அல்லது தத்தமது குப்பைகளை தமது வீடுகளில் போட்டு எரிக்கவும் அல்லது வெட்டி மண்ணில் புதைத்து விடவும். எமது நகரை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.